வார சந்தை ஏலம் நடத்துவதில் விதிமீறல் புகார்
அன்னுார்: மூன்றாண்டுக்குப் பிறகு அன்னுார் வார சந்தை ஏலம் இன்று நடைபெறுகிறது. ஏல அறிவிப்பில் விதிமீறல் என ஏலதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அன்னுார், ஓதிமலை சாலையில், வார சந்தை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று 500க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், காய்கறி, ஆடு மற்றும் மளிகை சாமான்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் கடந்த 2022ம் ஆண்டு நடந்தது. ஏலம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆனதையடுத்து வரும் 27ம் தேதி (இன்று) காலை 11:00 மணிக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் நடைபெறும் என பேரூராட்சி அறிவித்துள்ளது.இது குறித்து ஏலதாரர்கள் சிலர் கூறுகையில், 'வழக்கமாக 15 நாட்களுக்கு முன்பே பேரூராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் இதுகுறித்து அறிவிப்பு ஒட்டப்படும். தற்போது ஒட்டவில்லை. கடந்த முறை நடந்த ஏலத்தில் பங்கேற்ற ஏலதாரர்களுக்கு தற்போது சந்தை ஏலம் குறித்த நோட்டீஸ் அனுப்பவில்லை.எங்களுக்கு 25ம் தேதி தான் ஏலம் குறித்த நோட்டீஸ் கிடைத்துள்ளது. ஒரே நாளில் சொத்து மதிப்பு சான்றிதழ் பெற வேண்டி உள்ளது. ஏலம் நடத்துவதில் விதிமீறல் நடந்துள்ளது ,' என்றனர்.