உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி கூறி போஸ்டர் ஒட்டிய காங்., கவுன்சிலர்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி கூறி போஸ்டர் ஒட்டிய காங்., கவுன்சிலர்

போத்தனூர்; கோவையில் அங்கன்வாடி மையம் கட்டிக்கொடுத்த, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி தெரிவித்து, காங், கவுன்சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளார். கோவை மாநகராட்சியின், 85வது வார்டுக்குட்பட்டது கோணவாய்க்கால்பாளையம். கிணத்துகடவு தொகுதிக்குட்பட்ட இங்கு எம்.எல்.ஏ.,வின் நிதியிலிருந்து அங்கன்வாடி கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இதற்காக இவ்வார்டின் கவுன்சிலர் சரளா (காங்.,) போஸ்டர் அடித்து குறிச்சி, சுந்தராபுரம், போத்தனூர், கோணவாய்க்கால்பாளையம் உள்ளிட்ட கற்றுப்பகுதிகளில் ஒட்டியுள்ளார்.அதில், காங்., தலைவர்கள், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,தாமோதரன் மற்றும் கவுன்சிலர் சரளாவின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. 'முன்னாள் அமைச்சர், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., மரியாதைக்குரிய தாமோதரன் எம்.எல்.ஏ., அவர்கள், தங்களது மேம்பாட்டு நிதியின் மூலமாக கோணவாய்க்கால்பாளையம் பகுதியில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் கட்டி கொடுத்ததற்கு, பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக்கண்ட காங்.,- மற்றும் தி.மு.க., கட்சியினர், கவுன்சிலர் கட்சி தாவ தயாராகிவிட்டாரா என பேசிக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளை விடுங்க: கவுன்சிலர் சரளா

கவுன்சிலர் சரளாவிடம் கேட்டபோது, ''கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், இப்பகுதியில் சமுதாய கூடம், அங்கன்வாடி மையம் அமைத்து தர, எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை விடுத்தேன். ரூ.15 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டிக் கொடுத்தார். அப்பகுதி மக்கள் அனைவரும் எம்.எல்.ஏ..விற்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டலாம் என்றனர். பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டது. எனது தந்தை பழநியில் தி.மு.க.,வில் செயலாளராக இருந்தவர். பாரம்பரியமாக தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். திருமணமாகி வந்தது, காங்., குடும்பத்திற்கு. கட்சி தாவும் எண்ணம் எதுவும் கிடையாது. ஆளாளுக்கு விசாரிப்பதால், இனி எதற்கும் போஸ்டரே அடிக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை