உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொந்த வீட்டு கனவை கலைக்கும் விலை உயர்வு; போராட்டத்தை முன்னெடுக்கும் கட்டுமான துறை

சொந்த வீட்டு கனவை கலைக்கும் விலை உயர்வு; போராட்டத்தை முன்னெடுக்கும் கட்டுமான துறை

கோவை; கட்டுமான பொருட்களின் அபரித விலை உயர்வால், கனவு இல்லம் என்பது நடுத்தர, ஏழை மக்களுக்கு கனவாகவே உள்ள நிலையில் அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு அடுத்து தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் கோவை அபரித வளர்ச்சியை சந்தித்துவருகிறது. மேலும், சீதோஷ்ணம் உள்ளிட்ட காரணங்களால் கோவைக்கு இடம்பெயர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனால், மாநகரையும் தாண்டி புறநகரங்களில் குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. அதேசமயம், கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் சொந்த வீடு என்பது மக்களுக்கு கனவாக மாறிவருகிறது. இந்தாண்டு துவக்கத்தில் ரூ.4,000-4,300 வரை விற்பனையான செயற்கை மணல்(100 கன அடி) தற்போது ரூ.4,500-4,700 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல், ரூ.3,200-3,500 ஆக இருந்த ஜல்லி (100 கன அடி) தற்போது, ரூ.3,700-4,000 ஆகவும் உள்ளது. இதையடுத்து, கல்குவாரி கிரஷர் உரிமையாளர்களின் தன்னிச்சையான விலையேற்றத்தை கண்டித்து சிவில் இன்ஜினியர்கள், மணல் லாரி உரிமையாளர்கள், மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழக அரசு தலையிட்டு விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட சிவில் இன்ஜினியர்கள் மட்டும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர்.எச்.எம்.எஸ்., சங்க செயலாளர் மனோகரன் கூறுகையில்,''நாளை(இன்று) கட்டுமான தொழில் சங்கத்தினருடன் கலந்தாலோசித்து எந்தவிதமான போராட்டத்தை முன்னெடுப்பது என்று முடிவு செய்யப்படும்,'' என்றனர்.

நியாயம் இல்லை!

குவாரி உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:கட்டுமான சங்கங்களில் குவாரி உரிமையாளர்களும் உறுப்பினர்களாக உள்ளோம். பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னையை பொதுவெளியில் போராட்டமாக அறிவித்துள்ளனர். அரசு அனுமதிக்கும் அளவுக்கு மட்டுமே கனிமம் வெட்டி எடுத்தால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடியும்.மீத நாட்களுக்கு ஆள் கூலி, இயந்திர செலவுகள் உள்ளிட்டவற்றை எப்படி ஈடுகட்டுவது. அரசிடம் பேசி வருகிறோம். வரும் வாரத்தில் முடிவு எட்டும் என நம்புகிறோம். இரு நாட்களுக்கு முன் சிமென்ட் விலை டன்னுக்கு ரூ.1,300 வரை உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து போராடாதவர்கள் குவாரிகளை எதிர்த்து போராடுவதில் நியாயமில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ