திருமண மண்டபம் கட்டுமான பணி துவக்கம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் அருகே, மிகவும் பழமை வாய்ந்த சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் இரண்டு மண்டபங்கள் இருந்தன. இவை சிதிலமடைந்ததால் இடிக்கப்பட்டது. இந்நிலையில் கோவில் அருகே உள்ள காலி இடத்தில் திருமண மண்டபம் கட்டுவதற்கு, 3.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை கோவில் வளாகத்தில் நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, பணிகளை துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் கோவிலில் நடந்த பூமி பூஜையில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல், கோவில்களின் ஆய்வாளர் ஹேமலதா, மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக கோவில் வளாகத்தில், கும்பம் வைத்து அர்ச்சகர் கண்ணன் தலைமையில், குருக்கள் பூமி பூஜை செய்தனர்.