வாக்காளர் பட்டியல் திருத்தம் :கட்சியினருடன் ஆலோசனை
சூலூர்: சூலூர் தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன், தேர்தல் அலுவலர் ஆலோசனை நடத்தினார். இந்திய தேர்தல் கமிஷன் தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை துவக்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக, சட்டசபை தொகுதி வாரியாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சூலூர் சட்டசபை தொகுதிக்கான ஆலோசனை கூட்டம், தாலுகா அலுவலகத்தில், கோவை நகர்புற நிலவரி துணை கமிஷனர் மற்றும் சூலூர் தொகுதி தேர்தல் அலுவலரான ஜெகநாதன் தலைமையில் நடந்தது. தேர்தல் கமிஷனின் உத்தரவு படி சூலூர் தொகுதி முழுக்க வீடு, வீடாக வாக்காளர் சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது. மூன்று முறை வீடுகளுக்கு வந்து கணக்கெடுப்பார்கள். அதன்பின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தொகுதியில், 333 ஓட்டு சாவடிகள் உள்ளன. அவற்றுக்கான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சரிபார்ப்பு பணியை மேற்கொள்வர். அனைத்து கட்சி பிரதிநிதிகளும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என, தேர்தல் அலுவலர் ஜெகநாதன் பேசினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சூலூர் தாசில்தாருமான செந்தில்குமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.