தேயிலை ஏலத்தில் தொடர் சரிவு 51.81 சதவீதம் தேக்கம்
குன்னுார் : குன்னுார் தேயிலை ஏலம் தொடர் சரிவை சந்தித்து வருவதால் தற்போது, 51.81 சதவீத தேயிலை துாள் தேக்கம் அடைந்தது.நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள் குன்னுார் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஏற்றம் கண்டு வந்த தேயிலை விற்பனை, கடந்த ஒரு மாத காலமாக சரிவை நோக்கி செல்கிறது. குன்னுார் ஏல மையத்தில் இரு நாட்களுக்கு முன்பு நடந்த, 45வது ஏலத்தில், 31.60 லட்சம் கிலோ துாள் ஏலத்திற்கு வந்ததில், 15.23 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த ஏலத்தை விட, 7.97 லட்சம் கிலோ உற்பத்தி அதிகரித்த போதும், விற்பனை வெகுவாக சரிந்தது. குறிப்பாக, கடந்த ஏலத்தை விட, 1.5 லட்சம் கிலோ விற்பனை குறைந்தது. இதனால், 48.19 சதவீதம் விற்பனையாகி, 51.81 சதவீதம் தேக்கமடைந்தது. சராசரி விலை கிலோவிற்கு, 137.29 ரூபாய் என இருந்தது. ஒரே வாரத்தில் கிலோவிற்கு, 6 ரூபாய் சரிந்தது. மொத்த வருமானம், 20.91 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 3.05 கோடி ரூபாய் குறைந்தது. வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ''ஏல மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்காததால் தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. அதில், தீபாவளி விடுமுறையையொட்டி, 3 நாட்களுக்கு முன்னதாகவே தேயிலை துாள் சாம்பிள் எடுக்க, தேயிலை வாரியத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் வரத்து அதிகரித்த போதும் தேயிலை துாள் தேக்கமடைந்தது. இதனால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,' என்றனர்.