உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லஞ்ச அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கைக்கு காத்திருக்கும் மாநகராட்சி

லஞ்ச அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கைக்கு காத்திருக்கும் மாநகராட்சி

கோவை: கோவை மாநகராட்சி இளநிலை பொறியாளர் விமல்ராஜ் மீது, லஞ்ச வழக்கு பதிவானதை தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கைக்கு, மாநகராட்சி நிர்வாகம் காத்திருக்கிறது.இதற்கிடையே, கடலுார் மாநகராட்சிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டு, கோவையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.கோவை மாநகராட்சி, 80, 81 மற்றும், 83வது வார்டு இளநிலை பொறியாளராக இருந்தவர் விமல்ராஜ். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், மாநகராட்சி வார்டு அலுவலகத்துக்கு நேரில் ஆய்வு செய்தனர்.கணக்கில் வராமல் வைத்திருந்த, ஒரு லட்சத்து இரண்டாயிரத்து நுாறு ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்து, அவர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்தனர்.அரசு அலுவலர் அல்லது அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு துறையோ அல்லது காவல்துறையோ குற்ற நடவடிக்கையின் கீழ் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தால், துறை ரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.அவர் செய்து வரும் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார், ஆனால், விமல்ராஜ் பணிபுரிந்த அலுவலகத்தில், 10ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆய்வு செய்தனர்; 11ம் தேதி எப்.ஐ.ஆர்., தாக்கல் செய்தனர். ஒரு வாரமாகியும் நேற்று வரை அவர் மீது, மாநகராட்சி அதிகாரிகள் துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தப்பவே முடியாது!

அதிகாரிகள் கூறுகையில், 'லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரகத்தில் இருந்து இன்னும் அறிக்கை வரவில்லை; அறிக்கை வந்ததும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்கு முன்னதாகவே, அவரை கடலுார் மாநகராட்சிக்கு இட மாறுதல் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டிருந்ததால், கோவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இயக்குனரகத்தில் இருந்து அறிக்கை வந்ததும், உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்த உத்தரவு, கடலுார் மாநகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டு, பணியில் இருந்து விடுவிக்கப்படுவார். அரசின் நடவடிக்கையில் இருந்து, எப்போதும் தப்பிக்க முடியாது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை