பிடே ரேட்டிங் செஸ் போட்டியில் மாநகராட்சி பள்ளி மாணவி அசத்தல்
கோவை : கோவை மாநகராட்சி பள்ளி மாணவி முதல் முறையாக, 'பிடே ரேட்டிங்' செஸ் போட்டியில், 5.5 புள்ளிகள் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.சமீபகாலமாக இளம் செஸ் வீரர்கள் வெற்றி வாகை சூடி தேசத்துக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறமையை அறிந்து, அடுத்தகட்டத்துக்கு அழைத்து செல்ல, அரசுபயிற்சிகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது.கோவை மாநகராட்சிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, ஆர்.எஸ்.புரம், எஸ்.ஆர்.பி., அம்மனியம்மாள் மாநகராட்சி பள்ளி மாணவி ஸ்ரீநிதி, 'பிடே ரேட்டிங்' செஸ் போட்டியில் பங்கேற்று அசத்தியுள்ளார். கரூரில் மாநில அளவிலான, 34வது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 'பிடே ரேட்டிங்' செஸ் போட்டிசமீபத்தில் நடந்தது.இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில், மாணவி ஸ்ரீநிதி, 9 சுற்றுகள் விளையாடினார். ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஐந்து வெற்றி, இரண்டு 'டிரா' என, 9க்கு, 5.5 புள்ளிகள் பெற்று 'பிடே ரேட்டிங்' பெற்றுள்ளார். மாணவியை, பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.