| ADDED : நவ 28, 2025 03:09 AM
காரமடை: காரமடை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நேற்று, நகராட்சி தலைவர் உஷா (தி.மு.க.,) தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் சரமாரி புகார்களை முன் வைத்து காரசாரமாக கேள்விகளை எழுப்பினர். விக்னேஷ் (பா.ஜ.,)- துாய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால், வார்டுகளில் துாய்மைப் பணிகள் பாதிப்பு அதிகரித் துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியத்துடன் உள்ளனர். தியாகராஜன் (தி.மு.க.,)- ஒப்பந்த துாய்மைப் பணியாளர்களை பணிக்கு எடுக்கும் விவகாரத்தில், இதுவரை ஏன் டெண்டர் வைக்கவில்லை. நகராட்சியில் உள்ள நிரந்தர துாய்மைப்பணியாளர்களை அதிகப்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். வனிதா (அ.தி.மு.க.,)- காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. காரமடை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் ஒரே நபர் தான் கொசு மருத்து அடிக்கிறார். குருபிரசாத் (தி.மு.க.,)- கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு இயந்திரங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால் வீடுகளின் அருகில் உள்ள புதர்கள், செடிகளில் கொசு மருந்து அடிக்க முடிவதில்லை. வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது, கவுன்சிலர்களிடம் அதிகாரிகள் ஆலோ சனை கேட்பதில்லை. நகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் பேசுகையில், ''எஸ்.ஐ.ஆர்., பணிகளால், கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிக்கு வருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் டெண்டர் விடப்படும்,'' என்றார். பிரியா (மா. கம்யூ.,)- தண்ணீர் சப்ளை குறித்து எப்போது கேட்டாலும் வால்வு பிரச்சனை உள்ளது என்றே பதில் வருகிறது. எனது 1வது வார்டு மக்களிடம் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நகராட்சி மேற்பார்வையாளர் சிவக்குமார் பேசுகையில், ''வாட்டர் ஆப்ரேட்டர்கள் வாயிலாக தண்ணீர் விநியோகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.--