காலகாலேஸ்வரர் கோவிலில் கவுரவிக்கப்பட்ட தம்பதிகள்
கோவில்பாளையம்: இந்து சமய அறநிலைய த்துறை சார்பில் 20 மூத்த தம்பதிகள் கவுரவிக்கப்பட்டனர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் 70 வயது பூர்த்தியடைந்த, மணிவிழா கண்ட, ஆன்மீக ஈடுபாடு உள்ள 2000 தம்பதிகளுக்கு திருக்கோவில் சார்பில் சிறப்பு செய்யப்படும் என தமிழக அரசு இரு மாதங்களுக்கு முன் அறிவித்தது. இதன்படி கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, கோவை தெற்கு, வடக்கு, மேட்டுப்பாளையம், அன்னூர் தாலுகாக்களில் மணிவிழா கண்ட 20 தம்பதியர் தேர்வு செய்யப்பட்டனர். கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தம்பதியருக்கு வேட்டி, சட்டை, சேலை, ரவிக்கை, மாலை என தலா 2500 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் 20 தம்பதிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ், பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணை தலைவர் விஜயகுமார், மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.