காட்டுப் பன்றிகளால் பயிர் சேதம் தொடர்கிறது; அரசாணையை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தல்
கோவை; காட்டுப்பன்றிகளால், விவசாயப் பயிர்கள் சேதமடைவது தொடரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டத்தில், சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில், காட்டுப் பன்றிகள், விவசாயப் பயிர்களை சேதப்படுத்துகின்றன. இவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டதால், கடந்தாண்டு, தமிழ்நாடு வன உயிரின மோதல் தடுப்பு குழு' உருவாக்கப்பட்டது. தற்போது, வெங்காய பயிர்களை சேதப்படுத்தி வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பெரியசாமி கூறியதாவது:கோவை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் பன்றிகளை பிடிக்க கூண்டு வைக்கப்படுகிறது. சில பன்றிகளை பிடித்து வனப்பகுதிகளில் விடுவிப்பதால், மீண்டும் அந்தப் பன்றிகள் விவசாய நிலங்களில் வந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே அரசாணையில் தெரிவித்துள்ளபடி, வனப்பகுதியில் இருந்து மூன்று கி.மீ., தொலைவுக்கு அப்பால் வரும் பன்றிகளை கண்டறிந்து சுட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தாததால், கோவை -பச்சாபாளையம் சிறுவாணி பிரதான சாலை அருகில், கிட்டத்தட்ட மலைப்பகுதியில் இருந்து ஆறு கி.மீ.,க்கு அப்பால், பேரூர் -செட்டிபாளையம் பகுதியில், ஒருவர் தோட்டத்தில் பயிரிடப்பட்ட ஐந்து ஏக்கர் வெங்காய பயிரை, காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இதே போல், தீத்திபாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவரது தோட்டத்திலும் ஒரு வார காலமாக வெங்காய பயிரை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. எனவே, இப்பிரச்னைக்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.