பெண்கள், குழந்தைகளுக்கான சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கோவை: பெண்கள், குழந்தைகளுக்கான சைபர் பாதுகாப்பு குறித்து நாட்டின், 28 மாநிலங்கள் வழியாக செல்லும் விழிப்புணர்வு பேரணி, கோவையில் நேற்று துவங்கியது.விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்கும் சங்கர் ராஜ், தினேஷ்குமார் கூறியதாவது:நாட்டின், 28 மாநிலங்கள் வழியாக, 17 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நான்காம் ஆண்டாக இவ்விழிப்புணர்வு பேரணியை மேற்கொள்கிறோம்.கடந்த மூன்று ஆண்டுகளாக, பைக் வாயிலாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இந்தாண்டு கார் வாயிலாக பயணம் செய்கிறோம். அரசு பள்ளியில் பயிலும் மாணவியர், ஆசிரியர்களுக்கு இவ்விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.இன்று சமூக வலைதளங்களில், பெண்கள் பாதிக்கப்படுவது அதிகம். அவர்களுக்கு, தங்கள் விபரங்கள் எப்படி மோசடி செய்யப்படுகிறது என்பது தெரிவதில்லை. அரசு பள்ளிகளில் நாங்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வுக்கு, அதிக வரவேற்பு உள்ளது.இன்னும் பலருக்கு, சைபர் மோசடி குறித்து விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு இதுகுறித்து தெரிவதில்லை. அதனாலேயே கிராமப்புற அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதை தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பேரணியை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார்.