சாலையோரம் குவிக்கும் குப்பை கழிவால் பாதிப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன்கோட்டாம்பட்டி, பட்டத்தரசி நகர் பகுதியில், சாலையோரத்தில் குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரம் பாதிக்கிறது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 150 வீடுகளுக்கு ஒரு துாய்மை பணியாளர் நியமிக்கப்பட்டு, வீடுகள்தோறும் நேரடியாக குப்பை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பல ஊராட்சிகளில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பை, சாலையோரம் குவிக்கப்படுகிறது. ஜமீன்கோட்டாம்பட்டி பட்டத்தரசிநகர் பகுதியில், சாலையோரத்தில் குப்பை குவிப்பதால், சுகாதாரம் பாதித்து, பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் கூறியதாவது: பட்டத்தரசி நகர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக குப்பை கிடங்காக இப்பகுதி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தினர், போதிய எண்ணிக்கையில் துாய்மை பணியாளர்கள் இல்லை என, தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் போதிய அளவில் துாய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். சாலையோரத்தில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.