உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் சேதம்; வாகனங்கள் பாதிப்பு

பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் சேதம்; வாகனங்கள் பாதிப்பு

மின்கம்பம் சேதம்

சுல்தான்பேட்டை, வேப்பநாயக்கன்பாளையத்தில் வாரச்சந்தை கூடும் இடத்தில், பள்ளி அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் உள்ளதால், மின் துறை அதிகாரிகள், இந்த கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -சாமி, சுல்தான்பேட்டை.

மின்விளக்கு தேவை

பொள்ளாச்சி, மீன்கரை ரோடு மோதிராபுரம் பிரிவு பகுதியில் போக்குவரத்து அதிகப்படியாக உள்ளது. இங்கு இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் அவ்வழியில் நடந்து செல்பவர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.-- -மணிவாசகம், பொள்ளாச்சி.

ரோட்டில் கழிவு நீர்

கிணத்துக்கடவு, தாமரைக்குளம் சர்வீஸ் ரோட்டில் ஆங்காங்கே கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் பயணிக்க மக்கள் சிரமப்படுகின்றனர். இதை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.-- -கணேசன், தாமரைக்குளம்.

பாழாகும் உழவர் சந்தை சுவர்

உடுமலை உழவர் சந்தை வளாக சுவரில், விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அகற்றபடாமல் உள்ளது. இதனால், சுவர் பாழடைந்து வருகிறது. போஸ்டர்களை அகற்றி பொலிவு பெற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சரவணன், உடுமலை.

உருக்குலைந்த ரோடு

கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயில் சேதம் அடைந்து பள்ளம் போன்று உள்ளது. இதனால், இவ்வழியில் பஸ் பயணிக்க சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.- -ராமகிருஷ்ணன், கிணத்துக்கடவு.

விபத்துகள் அதிகரிப்பு

உடுமலை, பழநி ரோடு அரசு உதவிபெறும் பள்ளி அருகே, எதிர்புறம் அண்ணா குடியிருப்பிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக ரோட்டை கடப்பதால், நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் இவ்வாறு விபத்துகள் நடப்பது அதிகரிக்கிறது.- பாலாஜி, உடுமலை.

சிதிலமடைந்த நடைபாதை

உடுமலை, பைபாஸ் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு போடப்பட்ட நடைபாதை சிதிலமடைந்து, இடியும் நிலையில் உள்ளது. தற்போது அப்பகுதி திறந்தவெளிக்கழிப்பிடமாகவும் மாறி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடைபாதை பயன்படுத்தும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நாச்சிமுத்து, உடுமலை.

போக்குவரத்து நெரிசல்

உடுமலை, வ.உ.சி., வீதியில் நடைபாதையில் வணிக கடைகளின் பொருட்கள் வைத்து ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால், பாதசாரிகள் நடந்து செல்வதற்கு இடமில்லாமல் ரோட்டில் செல்ல வேண்டியுள்ளது. வாகனங்கள் அவ்வழியாக செல்வதற்கும் இடையூறு ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் விரைவாக செல்வதற்கும் வழியில்லாமல் போக்குவரத்து நெரிசலாகிறது.- ஜீவானந்தம், உடுமலை.

எரியாத தெருவிளக்குகள்

உடுமலை, பழனியாண்டவர் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் பலரும் தளி ரோட்டிலிருந்து கொழுமம் பிரிவு ரோடு வருவதற்கு அப்பகுதியை பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் அந்த ரோட்டை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.- குமார், உடுமலை.

கழிவு நீர் தேங்கம்

பொள்ளாச்சி மகாலிங்கபுரம், பாரதி வீதியில், கால்வாயில் கழிவு நீர் செல்லாமல் அடைத்து தேங்கி நிற்கிறது. இதனால், அங்கு அதிகளவு கொசு உற்பத்தியாகிறது. அவ்வழியில் மக்கள் பலர் நடந்து செல்வதால், உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக சீரமைக்க வேண்டும்.-- -டேனியல், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை