| ADDED : நவ 20, 2025 05:21 AM
அன்னுார்: அன்னுாரில் கிணற்று சுற்றுச்சுவர் சேதமடைந்ததால், தாசபாளையம் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அன்னுாரில், சத்தி சாலையில் இருந்து தாச பாளையத்திற்கு பாதை செல்கிறது. இந்த பாதையை ஒட்டி 150 அடி ஆழ கிணறு உள்ளது. கிணற்றின் மேல் பகுதி வரை தண்ணீர் உள்ளது. 50 அடி அகலமும், 60 அடி நீளமும் உள்ள இந்த கிணற்றில் ஒரு பக்க சுவர் சேதமடைந்து கிணற்றுக்குள் இறங்கி வருகிறது. இதனால் கிணற்றுக்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் கிணற்றில் விழும் அபாயம் உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதையில் இருசக்கர வாகனம், கார் மற்றும் ஆட்டோக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மினி பஸ், லாரி, பஸ் ஆகியவை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த மினி பஸ் மாற்று பாதையில் இயங்குகிறது. 'விரைவில் கிணற்று சுற்றுச்சுவரை சரி செய்து பாதுகாப்பு வேலி அமைத்து இந்த பாதையில் மீண்டும் அனைத்து வாகனங்களும் இயங்கும்படி செய்ய வேண்டும்,' என தாசபாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.