வக்கீல் பாதுகாப்பு சட்டம் இயற்ற முதல்வரிடம் முறையிட முடிவு
கோவை: வக்கீல் பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி, தமிழக முதல்வரை சந்திக்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது. கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் கூறியதாவது: தமிழகத்தில் வக்கீல்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரி வருகிறோம். இதுதொடர்பாக, தமிழக முதல்வரை சந்தித்து பேச முடிவு செய்துள்ளோம். திருச்சியில், 6ம் தேதி வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சேமநல நிதி, ரூ.10 லட்சத்தில் இருந்து, 25 லட்சமாக உயர்த்த வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை வழக்கறிஞர்களிடம் இருந்து பறிக்கும் வகையிலும், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தும் வகையிலும், மதுரை ஐகோர்ட் கிளை வழங்கியுள்ள தீர்ப்பை, மறு பரிசீலனை செய்யக் கோருதல், நீதிமன்ற காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.