ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு விடுகளை ரயில்வே அதிகாரிகள் இடித்து அகற்றினர். மேட்டுப்பாளையம் பாரதி நகர் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். தற்போது, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அங்குள்ள 12 வீடுகளை அப்புறப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக ஏற்கனவே சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், நேற்று ஜே.சி.பி., இயந்திரங்களுடன் சென்று எட்டு வீடுகளை அதிகாரிகள் அகற்றினர். மீதமுள்ள வீடுகளில் உள்ளோர் 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.