சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா ரத்து செய்ய கோரி 12ல் ஆர்ப்பாட்டம்
வால்பாறை ; சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி, ம.தி.மு.க., சார்பில் வரும், 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.வால்பாறை ஒன்றிய ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நகர செயலாளர் கல்யாணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில்,வால்பாறையில் வளமையமான வனம், உயிரினங்கள், நீர் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிர்காலங்களில் மாசில்லாமல் பேணிக்காக்கவும், இயற்கையுடன் இணைந்து மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.நீர் ஆதாரங்களின் முழுபயனை அடையவும், நீரின்றி வறண்டு கிடக்கும் நிலபரப்பிற்கு, இங்குள்ள நீரினை கொண்டு சென்று பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களை முன்னிருத்தி, 'சுற்றுச்சூழல்உணர் திறன் மசோதா' வரைவு அறிக்கை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.மத்திய அரசின் இந்த மசோதாவை உடனடியாக ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் அவசரத்தீர்மானம் கொண்டுவர வேண்டும். வால்பாறை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள 'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா' வரைவு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.தவறும் பட்சத்தில், ம.தி.மு.க., சார்பில் வரும், 12ம் தேதி நகராட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், ம.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் அன்பழகன், கிளை கழக செயலாளர்கள் ராஜேந்திரன், பால்ராஜ், மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.