பள்ளி மேலாண்மை குழுவில் புதியவர்களுக்கு இடம் மறுப்பு
கோவை; பள்ளி மேலாண்மை குழு வாயிலாக நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில், இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன. கோவையில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், பெரும்பாலும் பள்ளி மேலாண்மை குழு வாயிலாக, வெளிமுகமை முறையில் நிரப்பப்படுகின்றன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு குறைந்தது 18 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரையும், தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சில பள்ளிகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களே, மீண்டும் அதே பணியில் தொடர்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, 6 மாதங்கள் வரை பணிநீட்டிப்புடன் ஓய்வு பெற்றும், ஓய்வூதியம் பெறும் நிலையிலும், தலைமையாசிரியரின் பரிந்துரையில், அதே பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக தொடர்ந்து பணியாற்றுவதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், உரிய கல்வித் தகுதிகள் உள்ள புதியவர்கள், குறிப்பாக இளம் தலைமுறை ஆசிரியர்கள், வாய்ப்பு அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கோவை மாவட்ட பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கக கருத்தாளர் அருளானந்தம் கூறுகையில், ''6 முதல் 10ம் வகுப்பு வரை, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, பி.எட்., படிப்புடன் டெட்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும். தகுதியானோர் கிடைக்காதபட்சத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்கலாம். தகுதியானவர்கள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்,'' என தெரிவித்தார்.