வார நாட்களில் வெறிச்சோடிய ஆழியாறு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணைக்கு, சனி, ஞாயிறு தவிர்த்து, வார நாட்களில், சுற்றுலாப் பயணியர் வருகை குறைவாக காணப்படுவதால், அப்பகுதி வெறிச்சோடி விடுகிறது.பொள்ளாச்சி அருகே உள்ள, ஆழியாறு அணை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணியர், ஆழியாறு அணை மற்றும் பூங்காவை ரசித்து செல்ல தவறுவதில்லை.குறிப்பாக, விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், சுற்றுலா பயணியர் கூட்டம் இப்பகுதியில் அதிகமாக இருக்கும். அதேநேரம், வார நாட்களில், சுற்றுலாப் பயணியர் வருகை முற்றிலும் குறைந்து காணப்படுவதால், அப்பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது. கடைக்காரர்கள் வியாபாரமின்றி பரிதவிப்புக்கு உள்ளாகின்றனர்.கடைக்காரர்கள் கூறியதாவது:ஆழியாறு அணைக்கு வரும் சுற்றுலாப் பயணியரை மையமாகக் கொண்டு, சிலர், கடைகள், அமைத்து உணவுப் பொருட்கள் விற்பனை செய்கின்றனர். அதன்படி, மீன் வறுவல், பழங்கள், தானியங்கள் உள்ளிட்டவை விற்கப்படுகிறது.விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமிருக்காது. அந்த அளவிற்கு சுற்றுலாப் பயணியர் வருகை அதிகம் இருக்கும். ஆனால், வார நாட்களில், சுற்றுலாப் பயணியர் வருகை முற்றிலும் குறைந்து விடுகிறது. வியாபாரம் இருக்காது என்பதால், பலரும், கடையை திறக்க முற்படுவதில்லை.இவ்வாறு, கூறினர்.