அரசாணை வெளியாகியும் பணிமாறுதல் நடக்கவில்லை
கோவை: ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டிய பட்டதாரி ஆசிரியர், பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாததால், அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்புவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 500 சீனியர் ஆசிரியர் பயிற்றுநர்கள், பணிமூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிட மாறுதல் செய்யப்படுவர்; இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் பணியில் உள்ள 500 சீனியர் ஆசிரியர் பயிற்றுநர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிமாறுதல் செய்யப்படுவர்' என்று குறிப்பிட்டு,பள்ளிக்கல்வித்துறை 2021ல் அரசாணை(எண். 134)வெளியிட்டது. அரசாணை வெளியான பின், இதுவரை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அதோடு, 2010ம் ஆண்டிலிருந்து ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்திற்கு, புதிய நியமனங்கள் எதுவும் இல்லை என்கின்றனர் கல்வித்துறையினர். 'புதிய நியமனங்களும், இந்த வருடாந்திர பணிமாறுதலும் முறையாக செய்யப்பட்டிருந்தால், அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை எளிதாகப் பூர்த்தி செய்திருக்க முடியும்' என சுட்டிக்காட்டுகின்றனர். ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பல அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் பயிற்றுநர்கள், இந்த பணியிடத்திற்கு முழு தகுதியானவர்கள். எனினும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதை காரணம் காட்டி, பணிமாறுதல் வழங்க மறுக்கின்றனர். இதனால், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமலும், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பாடம் சொல்லித்தர ஆசிரியர் இல்லாமல், ஏழை மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்' என்றனர்.