இருளால் பெருகும் குற்றம் காளப்பட்டி ரோட்டில், ஐவா கோவில் பகுதியில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த ரோட்டில் மின்கம்பங்கள் இருந்தும் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இரவில் செயின் பறிப்பு நடக்கிறது. சாலையோரம் கார்களை நிறுத்தி தகாத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். - செந்தில்முரளி: வழுக்கி விழுகின்றனர் வெள்ளலுார், தேனீஸ்வரன் நகருக்கு தார் சாலை வசதி அமைத்து தர, பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. மண் சாலை மழை பெய்யும் போது சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. பள்ளி குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது வழுக்கி விழுகின்றனர். வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் மாட்டிக்கொள்கின்றன. - பாலசுப்பிரமணியம்: இரவில் துாக்கமில்லை சூலுார், அரசூர், சரவணம்பட்டி முதல் தென்னம்பாளையம் ரோட்டில், சாலையோரம் அதிக குடியிருப்புகள் உள்ளன. பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அதிக வாகனங்கள் செல்கின்றன. ஏர் ஹாரன் எழுப்பும் அதிக சத்தம் காரணமாக, இரவில் துாங்க முடியாமல் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். - கருப்புசாமி: இடிந்த சாக்கடை மாச்சம்பாளையம், இடையர்பாளையம் மெயின் ரோடு, 94வது வார்டு, ராஜாஜி வீதியில், பாதாள சாக்கடை சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. பிளாஸ்டிக் கழிவும் கால்வாயில் அடைத்து நிற்கிறது. - வேல்முருகன்: துரத்தும் நாய்கள் பொன்னையராஜபுரம் ரோட்டில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகிறது. சாலையில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. சமீபத்தில் சைக்கிளில் சென்றவரை நாய் துரத்தி கடித்துவிட்டது. - சங்கர்: கழிவு தேக்கம் பழையூர், 49வது வார்டு, குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. சாலையோரம் தேங்கியுள்ள கழிவு பல வாரங்களாக அகற்றப்படாமல் உள்ளது. கவுன்சிலரிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையுமில்லை. - முத்துக்குமார்: குடிநீரின்றி தவிப்பு சரவணம்பட்டி, சிவானந்தபுரம் பகுதியில், முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் தண்ணீர் விநியோகிக்கப்படாததால், குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். பலர் கேன் தண்ணீரை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். - ஹரி: குப்பை நிறைந்த ரோடு மாநகராட்சி, 50வது வார்டு, இந்துஸ்தான் கல்லுாரி சாலையை பல வாரங்களாக சுத்தம் செய்யவில்லை. காய்ந்த இலைகள், குப்பை சாலையோரம் தேங்கியுள்ளது. குப்பையை அகற்றி சாலையை சுத்தம் செய்ய வேண்டும். - தேவதாஸ்: கடும் துர்நாற்றம் நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் நீர் வழிப்பாதையில், தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. மலைபோல் குவிந்துள்ள குப்பையால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. - ஜோதிமணி: சாக்கடை அடைப்பு சிங்காநல்லுார், பேருந்து நிலையத்தில் கழிப்பறையிலிருந்து கழிவுநீரை அப்படியே சக்தி விநாயகர் கோயில் அருகில் சாக்கடை கால்வாயில் விடுகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயில் மண், பாட்டில், டம்ளர் என நிறைந்து அடைத்து நிற்கிறது. கவுன்சிலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. - கேத்ரின்: