வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
தொண்டாமுத்துார்; உடுமலைப்பேட்டை, சாரதாமணி வீதியைச் சேர்ந்தவர் சுந்தரம்,60. ஒன்றரை ஆண்டுக்கு முன், குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து, பூண்டி அடுத்த தண்ணீர் பந்தலில் உள்ள ஆசிரமத்தில் தங்கி வந்தார். ஆசிரமத்தின் உரிமையாளர், வெள்ளியங்கிரி மலைத்தொடரில் ஆறாவது மலையில், மூலிகை மருந்து கடை வைத்துள்ளார்.ஆசிரமத்தில் தங்கியிருந்த சுந்தரம், ஆறாவது மலையில் இருந்த கடையை கவனித்து வந்தார். நேற்று முன்தினம், கடையில் தங்கியிருந்த சுந்தரம், பகல், 2:00 மணிக்கு, ஆறாவது மலையில் உள்ள ஆண்டி சுனையில் குளித்து விட்டு, துாங்கச் சென்றார். சிறிது நேரம் கழித்து, அவரை, உடன் வேலை செய்தவர் எழுப்பியுள்ளார். வெகுநேரமாகியும் சுந்தரம் கண் விழிக்கவில்லை. வனத்துறையினரின் உதவியுடன், சுந்தரத்தை, டோலி மூலம் அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு, 108 மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்தபோது, சுந்தரம் உயிரிழந்தது தெரியவந்தது.