மேட்டுப்பாளையத்தில் பழுதடைந்த மயான எரி கூடம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பங்களா மேடு, ராஜபுரம், சங்கர் நகர் ஆகிய மூன்று குடியிருப்பு பகுதிகளுக்கு, ராஜபுரம் மொக்கை அருகே, தாசில்தார் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் பொது மயானம் உள்ளது. இங்கு இறந்தவர்களின் உடல்களை புதைத்தும், எரித்தும் வருகின்றனர். இந்த மயானத்தில் அமைத்துள்ள எரி கான்கிரீட் கூடம், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை இடித்து விட்டு புதிய எரிகூடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பங்களா மேடு பொதுமக்கள் கூறுகையில், மயானத்தின் மேல்கூரை கான்கிரீட் தள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து உள்ளது. மேலும் மழைக்காலத்தில் இறந்தவர்களின் உடலை எரிக்கும் பொழுது, மேல் கூரை இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சம், உடலை எரிக்கும் நபர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதனால் உடலை எரிக்கும் நபர்கள் எரிகூடத்தை விட்டு வெளியே நின்று கண்காணித்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடல்களை எரிக்க புதிய எரி கொட்டகையும், மயானத்தைச் சுற்றி தடுப்பு சுவரும் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.