உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ் பாதுகாப்பு இயக்கம் கேரள முதல்வருக்கு கோரிக்கை

தமிழ் பாதுகாப்பு இயக்கம் கேரள முதல்வருக்கு கோரிக்கை

பொள்ளாச்சி : 'கேரளாவில் தமிழர்கள் வாழும் மாவட்டங்களில் மேல்நிலைக்கல்வியில் தமிழ்மொழி கற்க அரசு உத்தரவிட வேண்டும்' என, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கேரளா மாநில தமிழ்ப்பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் பேச்சிமுத்து, முதலமடை பள்ளி தமிழாசிரியர் ஜான்ஆல்பர்ட், பள்ளி மாணவ, மாணவிகள் முதல்வர் உம்மன் சாண்டியிடம் கொடுத்த மனு: பாலக்காடு மாவட்டம் முதலமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மொழிச்சிறுபான்மை மாணவர்கள் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலும் 500க்கும் மேற்பட்டவர்கள் தமிழ் வழியில் படிக்கின்றனர். அந்த மாணவர்களை பிளஸ் 1 வகுப்புக்கு சேர்க்கும் போது, தமிழ்மொழி இரண்டாவது மொழியாக எடுத்து படிக்க அனுமதி வழங்குவதில்லை. ஆனால், தமிழ் வழியில் படித்த மாணவர்கள், இந்தி மொழி எடுத்து படிக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆனால், மலையாள வழியில் இதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மலையாள மொழியை இரண்டாவது மொழியாக படிக்க அனுமதி வழங்கப்படுகிறது. தமிழ் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாரபட்ச நடவடிக்கையால் தேர்வில் இந்தியில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைகின்றனர். பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி கற்கும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர். கல்வியில் பின்தங்கிய மாநில எல்லைப்பகுதியான முதலமடை தமிழ் மொழிச்சிறுபான்மையினர் கல்வி நலன் கருதி, இந்த பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ்மொழி பாடமாக வைத்து மாணவர்களின் நலன் காக்க வேண்டும். மேல்நிலைக்கல்வியில் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர்களை தற்காலிகமாவது நியமிக்க வேண்டும். தமிழகத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, கன்னியாகுமரி, கூடலூர், சென்னையில் மேல்நிலைக்கல்வியில் மலையாள மொழி கற்க எந்த தடையும் இல்லை. அதேபோன்று, கேரளாவில் தமிழர்கள் வாழும் பாலக்காடு, வயநாடு, இடுக்கி, கொல்லம், பத்தனந்திட்டை, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் மேல்நிலைக்கல்வியில் தமிழ் மொழி கற்க அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ