உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருமுன் காப்போம்; வந்தபின் பரவாது தடுப்போம்

வருமுன் காப்போம்; வந்தபின் பரவாது தடுப்போம்

கோவை : ''நோய் வருமுன் காப்போம்; வந்தபின் பரவாமல் தடுப்போம் என்பதே எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் முக்கிய வழிமுறை'' என, முகமது அலி பேசினார். செஞ்சுருள் சங்க துவக்க விழா (ஆர்.ஆர்.சி.) அவினாசிலிங்கம் பல்கலையில் நடந்தது. செஞ்சுருள் சங்க இயக்க மாணவி பாரதி வரவேற்றார். பல்கலை பதிவாளர் கவுரி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோவை எய்ட்ஸ் வருமுன் தடுக்கும் அமைப்பு மாவட்ட திட்ட மேலாளர் முகமது அலி பேசியதாவது: சுயநலமின்றி சேவை செய்வதே செஞ்சுருள் சங்கத்தின் நோக்கம். எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு கல்வி ரீதியாக மட்டுமே அதிகம் ஏற்படுத்த முடியும். 17-25 வயதில்தான் சுயமாக சிந்தித்து, செயல்படும் பக்குவம் உருவாகிறது. அதேசமயம் தவறான வழிகளில் செல்லும் வயதும் எனலாம். மக்களில் குறிப்பாக இளைஞர்கள் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பெறவேண்டும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரை ஒதுக்காமல், தங்களது உறவினராகவும், சமுதாயத்தில் ஒருவராகவும் நினைக்க வேண்டும். வருமுன் காப்போம்; வந்தபின் பரவாமல் தடுப்போம் என்பதே எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் முக்கிய வழிமுறை. நோய் குறித்த விழிப்புணர்வுக்கு, கல்வியே ஒரு சிறந்த ஆயுதம். குதிரைக்கு கடிவாளம் போடுவது போல், நமக்கு நாமே கட்டுப்பாடு விதித்தால் ஒழுக்கநெறி மேம்படும். போதை பழக்கம், எய்ட்ஸ் நோயாளியின் ரத்த பரிமாற்றம், தவறான உறவுமுறை, நோய் தாக்கப்பட்ட தாய் மூலம் குழந்தைக்கு பரவுதல் உள்ளிட்ட வழிகளில் எய்ட்ஸ் பரவுகிறது. ரத்தத்திலுள்ள வெள்ளையணுக்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, நோய் எதிர்ப்பாற்றல் குறைவு ஏற்படுகிறது. இதனால், நோய் கூட்டு தொகுப்பு மற்றும் தொற்றும் தன்மை அதிகரிக்கிறது. நோய் தாக்கப்பட்டவரின் ஆடை அணிதல், கழிப்பிடம் பயன்படுத்தல், கொசு கடித்தல் போன்ற காரணங்களால் நோய் பரவாது. பலமுறை பயன்படுத்தப்பட்ட ஊசி, தகாத உறவு போன்ற சில காரணங்களாலே இது ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வேர்த்து விறுவிறுத்தல், திடீர் எடைகுறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை நோயின் சில அறிகுறிகள். நோயாளிகள் தொடர்சிகிச்சையில் ஈடுபடவேண்டும்; இல்லையேல் நோய் தன்மை முற்றிவிடும். நோய் தாக்கத்தை விரைவில் கண்டறிந்து, சிகிச்சைகள் மேற்கொண்டால் குணமடையும் வாய்ப்புகள் அதிகம். மேலும், வாழ்நாளும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் பேசினார். தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு சங்க கோவை மாவட்ட மேலாளர் வைத்தீஸ்வரன் 'வாழ்க்கை கொண்டாட்டம்' எனும் தலைப்பில் பேசினார். எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் செஞ்சுருள் சங்க மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவி ஷீலா லீலாவதி நன்றி கூறினார். சங்க ஒருங்கிணைப்பாளர் மணிமொழி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் மணிதேவி, பார்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ