உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் பணியாளர்களுக்கு கலெக்டர் கடும் உத்தரவு

தேர்தல் பணியாளர்களுக்கு கலெக்டர் கடும் உத்தரவு

கோவை : ''தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் சாதக, பாதகமாக செயல்படக்கூடாது. நடு நிலையோடு பணியாற்ற வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கலெக்டர் கருணாகரன் பேசினார். கோவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தலைமை தாங்கி கலெக்டர் கருணாகரன் பேசியதாவது: கோவையில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், உதவி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் கமிஷன் கொடுத்துள்ள விதி முறைகளை சரியாக படித்து தெரிந்து கொண்டு அதன்படி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும். வாக்காளர்களை கவரும் வகையில் ஈடுபடுவோரை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை அனைத்தும் உடனுக்குடன் தேர்தல் அலுவலரின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் நகல் கேட்போருக்கு வழங்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களின் வரைபடங்களை உடனடியாக தயார் செய்ய வேண்டும். பதட்டமான ஓட்டுச்சாவடிகளின் பட்டியலை போலீஸ் துறைக்கு வழங்கி, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.ஓட்டுப் பதிவு இரண்டு கட்டமாக நடப்பதால், பணி செய்யும் அலுவலர்களுக்கு தனித்தனியாக உத்தரவுகள் வழங்கப்படும். ஓட்டுப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள் எந்தெந்த மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது பற்றிய தகவலை முன் கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். தேர்தல் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை விரைவாக முடித்து, பயிற்சி பெற்றவர்களின் மொபைல் எண்களை பெற்று, பட்டியலிடவேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக அமுல்படுத்த வேண்டும். விதியை மீறி ஓட்டுச்சாவடி இருக்கும் பகுதியில் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் மற்றும் விளம்பரம் செய்ய அனுமதிக்கக் கூடாது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ செயல்படக்கூடாது. நடுநிலையோடு பணியாற்ற வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தேர்தல் பணியில் இல்லாத அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். வேட்புமனு பரிசீலனையின் போது ஆட்சேபணை தெரிவித்தால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். பரிசீலனை முடிந்த பிறகு மறுபரிசீலனை செய்யப்பட மாட்டாது. வேட்புமனு பரிசீலனையின் போது வெளி ஆட்களை அனுமதிக்கக்கூடாது, திருநங்கைள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவர்கள் விரும்பும் பாலினத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும்போது அரசியல் கட்சிகளுக்கு ரிசர்வ் செய்யப்பட்ட சின்னங்களும், சுயேச்சைகளுக்கு பெயர்களின் அகர வரிசைப்படி பட்டியல் தயார் செய்து குலுக்கல் முறையில் வழங்கவேண்டும். பூத் சிலிப் வழங்கும் அரசு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். மொத்தமாக எந்த அரசியல் கட்சிகளிடமும் வழங்கக்கூடாது. ஓட்டுச்சீட்டு எண்ணும்போது கவனமாக பணியாற்ற வேண்டும். செல்லாத ஓட்டுக்களை முடிவு செய்யும்போது கவனமாக முடிவெடுக்கவேண்டும். தேர்தலை சிறந்த முறையில் நடத்திட அனைத்து அலுவலர்களும், உழியர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினர்.இதில், மாநகராட்சி கமிஷனர் பொன்னுச்சாமி, கோவை காவல் கண்காணிப்பாளர் உமா மற்றும் அரசு அதிரிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ