தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: ஜெயிக்கப்போவது யார்?
'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா - வி.எல்.பி., ஜானகியம்மாள் அணிகள் இன்று மோதும் நிலையில், 'டிராபி'யை வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் இடையே எகிறியுள்ளது.கோவை விழாவின், 17வது பதிப்பை முன்னிட்டு 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'லைகா கோவை கிங்ஸ்' சார்பில் 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி கடந்த, 22ம் தேதி துவங்கியது. இதில், 32 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. முதல் அரை இறுதி
நேற்று பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்த அரையிறுதி போட்டிகளில், வீரர்கள் வெற்றி முனைப்புடன் போராடினர். முதல் அரையிறுதியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியும், கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி அணியும் மோதின. முதலில், பேட்டிங் செய்த கே.பி.ஆர்., அணி வீரர்கள், 20 ஓவர்களில், 9 விக்கெட்டுக்கு, 106 ரன்கள் எடுத்தனர்.அடுத்து களம் இறங்கிய ராமகிருஷ்ணா அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். 16.1 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 108 ரன்கள் எடுத்துஇறுதிப்போட்டிக்கு முன்னேறினர். 3 ஓவரில், 3 விக்கெட்கள் வீழ்த்திய ராமகிருஷ்ணா வீரர் கிருபாகருக்கு, 'வால்ரஸ்' நிறுவனர் டேவிட் ஆட்ட நாயகன் விருது வழங்கினார். 2ம் அரை இறுதி
இரண்டாம் அரையிறுதியில், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை கல்லுாரியும், என்.ஜி.எம்., அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த என்.ஜி.எம்., அணியினர், 16 ஓவரில், 55 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆகினர். தொடர்ந்து விளையாடிய, வி.எல்.பி., அணியினர், 17.1 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 56 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். நான்கு ஓவரில், 5 விக்கெட் வீழ்த்திய வி.எல்.பி., அணி வீரர் ஆனந்த்குமாருக்கு, இ.எல்.ஜி.ஐ., அல்ட்ரா நிறுவன இயக்க பொது மேலாளர் வெங்கடேஷ், துணைப் பொது மேலாளர் செந்தில்நாதன் ஆகியோர், 'ஆட்ட நாயகன்' விருது வழங்கினர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெற்றிபெற்ற அணிகள் இடையே இன்று மதியம் இறுதிப்போட்டி இடம்பெறுகிறது. முன்னதாக, அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த அணிகளுக்கு மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியும் காலையில் நடக்கிறது.
அணிகளுக்கு பரிசு மழை
n 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.எஸ்.வி.எம்., நிறுவனங்கள், இந்துஸ்தான் நிறுவனங்கள், 'வால்ரஸ்' நிறுவனம், சுப்ரீம் மொபைல்ஸ் ஆகியன இணைந்து வழங்குகின்றன.n வெற்றி பெறும் அணிகளுக்கு, முதல் நான்கு பரிசுகளாக, ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் டிராபி வழங்கப்படுகிறது. மூன்று சிறந்த பவுலர்கள் 'லைகா கோவை கிங்ஸ்' அணியால் 'நெட் பவுலர்'களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.