பாரத்நெட் திட்டத்தை தடை செய்யாதீர்மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
கோவை, ; கோவையிலுள்ள ஊராட்சிகளில் இணைய தள வசதி வழங்கும் பாரத்நெட் திட்டத்துக்கு தடை ஏற்படுத்துவோர் உபகரணங்களை சிதைப்போர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:கோவையிலுள்ள, 228 ஊராட்சிகளிலும் இணையதளவசதி வழங்கும் பாரத்நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.85 சதவீதம் கம்பங்கள் வழியாகவும்,15 சதவீதம் தரைவழியாகவும் ஊராட்சிகளில் இணையவசதி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.இந்த உபகரணங்கள் பொருத்திய அறையானது சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான உபகரணங்கள் அனைத்தும் அரசின் உடமைகள் ஆகும்.இந்த உபகரணங்களை சேதப்படுத்தும் திருடும் கண்ணாடி இழைகளை துண்டாக்குவோர் மற்றும் இதற்கு தடையை ஏற்படுத்துவோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.