முறைகேடுகளை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சோமனூர் : கருமத்தம்பட்டி நகராட்சியில், தாமதமாக நடக்கும் பணிகள் மற்றும் முறைகேடுகளை கண்டித்து, இரு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கருமத்தம்பட்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மனோகரன் ( தி.மு.க.,) தலைவராக உள்ளார். நகராட்சியில் சாதாரண கூட்டம், தலைவர் தலைமையில் நேற்று காலை துவங்கியது. கமிஷனர் பாரதி முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு முறையாக, முன்கூட்டியே அழைப்பு விடுப்பதில்லை. திடீரென கூட்டம் நடக்கிறது என, அழைத்தால் எப்படி வருவது என, கேட்டனர். இதற்கிடையில், தி.மு.க., வை சேர்ந்த, 2 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ், 19 வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி ஆகியோர், திடீரென உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். பணிகள் தாமதம், மனைப்பிரிவு அனுமதி வழங்குவதில் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும், எனக்கேட்டனர். ஆனால், தலைவரும், கமிஷனரும் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரு கவுன்சிலர்கள் கூறியதாவது:நான்கு ஆண்டுகளில் ஐந்து கூட்டங்கள் மட்டுமே நடந்துள்ளது. தலைவரின் பினாமிகள் டெண்டர் எடுத்து பணிகள் செய்கின்றனர். எந்த பணியும் தரமில்லை. காலதாமதம் செய்கின்றனர். முறைகேடுகள் நடக்கின்றன. கேட்டால் பதிலும் இல்லை. மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் பல முறைகேடுகள் நடக்கின்றன. ரிசர்வ் சைட்டுகளை கூட விடுவதில்லை. இப்பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்களுடன், கமிஷனர் பாரதி பேச்சுவார்த்தை நடத்தினார்.தி.மு.க., நகராட்சித் தலைவரை எதிர்த்து தி.மு.க., கவுன்சிலர்களே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.