வார்டுக்குள் எம்.பி.,யை வரச்சொல்லுங்க! தி.மு.க., பெண் கவுன்சிலர் போராட்டம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, வார்டுக்குள் எம்.பி., ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளைசெய்து தரவேண்டும் என வலியுறுத்தி,தி.மு.க., பெண் கவுன்சிலர், மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி அருகே, ஆனைமலை பேரூராட்சியில் மொத்தம், 18 வார்டுகள் உள்ளன. அதில், ஏழாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சாந்தி, நேற்று முன்தினம் திரவுபதி அம்மன் கோவில் ரோட்டில், திடீரென மறியலில் ஈடுபட்டார்.கவுன்சிலர் கூறியதாவது:கடந்த, நான்கு ஆண்டுகளாக பல முறை புகார் கூறியும், ஏழாவது வார்டில் தெருவிளக்கு, சாக்கடை, ரோடு என எவ்வித அடிப்படை வசதிகளும் மேம்படுத்தவில்லை. எனது வார்டில் வளர்ச்சிப்பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைவாக உள்ளது. அதே நேரத்தில்மற்ற வார்டுகளுக்கு, 50 லட்சம் முதல், 80 லட்சம் ரூபாய் வரை மேம்பாட்டு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது.எனது வார்டில் தான், 18 வார்டுகளின் குப்பையும் கொட்டப்படுகின்றன. மேலும், அரசு நடுநிலைப்பள்ளியில் கழிப்பிட வசதியில்லை. மாணவர்கள், இயற்கை உபாதைகளை கழிக்க ரோட்டுக்கு செல்லும் அவலம் நீடிக்கிறது.பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எம்.பி., ஈஸ்வரசாமி, வார்டுக்குள் வந்து பார்வையிட்டு அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, அங்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள், தி.மு.க.,வினர், போலீசார், கவுன்சிலரிடம் பேச்சு நடத்தி சமரசம் செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இச்சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொடர்ந்து,கோவில் ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை விழாவில் பங்கேற்க வந்தஎம்.பி., ஈஸ்வரசாமி,கவுன்சிலரிடம் மனுவை பெற்று, ஆய்வு செய்து பொது நிதி ஒதுக்கி, பணிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.தி.மு.க.,வை சேர்ந்தவர்களே பேரூராட்சித்தலைவராகவும், எம்.பி.,யாகவும் உள்ள சூழலில், ஆளும்கட்சி கவுன்சிலரே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.