கழுதை பால் விலை ஒரு சங்கு ரூ.100
பெ.நா.பாளையம்; கோவை புறநகர் பகுதிகளில் கழுதை பால் விற்பனை விறு,விறுப்பாக நடந்து வருகிறது.குழந்தைகளுக்கு அனைத்து வகைகளிலும் தாய்ப்பாலே சிறந்த உணவு என, மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பசும் பாலை விட, கழுதை பாலில் செரிமான தன்மை அதிகம் இருப்பதாகவும், அதை குடிப்பதால் உணவு நல்ல முறையில் செரிமானம் ஆகி உடல் ஆரோக்கியம் பெறும், உடலில் எதிர்ப்பு சக்தி பெருகும் என, நம்பி பலர் கழுதைப் பாலை வாங்கி செல்லும் வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் உள்ளது. சமீப காலங்களாக கோவை புறநகர் பகுதிகளில் கழுதை பால் ஒரு சங்கு, 100 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதை பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முன்னாள் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன் கூறுகையில், ''அனைவரும் கருதுவது போல கழுதை பாலில் சிறப்பான மருத்துவ குணங்களோ, வியாதிகளை சரி செய்யும் சிறப்பு அம்சமோ இல்லை. சாதாரண பசும்பால் போலத்தான் கழுதைப்பாலும் உள்ளது'' என்றார்.