| ADDED : ஜன 02, 2024 11:32 PM
வால்பாறை;அடர்ந்த வனப்பகுதியில் விறகு தேடி செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன.இயற்கை வளமும், வனவிலங்குகளும் அதிகளவில் உள்ள, அக்காமலை கிராஸ் ஹில்ஸ், மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணியர் அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சமீப காலமாக வால்பாறையில் அடர்ந்த வனத்தில் தொழிலாளர்கள் விறகு தேடி செல்வது வாடிக்கையாகிவிட்டது. சில நேரங்களில், வனவிலங்கு - மனித மோதல் ஏற்பட்டு, மனிதர்கள் உயிர்பலியாவதும் வாடிக்கையாகி விட்டது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் பருவமழைக்கு பின், வெயில் நிலவுவதால் வனவிலங்குகள் வெளியில் உலா வரத்துவங்கியுள்ளன. எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள், வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த வனப்பகுதியில் விறகு தேடி செல்வதை தவிர்க்க வேண்டும்.வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்வதால் சில நேரங்களில் தொழிலாளர்கள் வனவிலங்குகளிடம் சிக்கி உயிர்பலியாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் தங்களது பாதுகாப்பு கருதி, அடர்ந்த வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்வதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.