உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாதாரண அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்! புற்றுநோய் தடுக்க அரசு டாக்டர் எச்சரிக்கை

சாதாரண அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்! புற்றுநோய் தடுக்க அரசு டாக்டர் எச்சரிக்கை

கோவை; ''ஆரம்ப நிலையில் சிகிச்சைக்கு வரும் பட்சத்தில், 90 சதவீதம் புற்றுநோய்களை குணமாக்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். பெரும்பாலானவர்கள் ஆரம்ப நிலை அறிகுறியை கண்டுகொள்வதில்லை,'' என கோவை அரசு மருத்துவமனை புற்றுநோய் மருந்தியல் துறைத்தலைவர் பிரபாகர் தெரிவித்தார். இதுகுறித்து, டாக்டர் பிரபாகர் கூறியதாவது: பெண்களை பொறுத்தவரையில் மார்பகம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஆண்களை பொறுத்தவரையில் வாய், உதடு, தொண்டை, நுரையீரல் புற்றுநோய்கள் அதிகம். இருபாலரை ஒப்பிடுகையில் குடல் புற்றுநோய், உணவு குழாய் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. இச்சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும்பாலும், முற்றிய நிலையிலேயே வருகின்றனர். ஆரம்ப நிலையில் வெளிப்படும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தி, சாதாரணமாக கடந்து விடுகின்றனர்.உதாரணமாக, மலத்தில் ரத்தம் போவது, 'பைல்ஸ்' என நினைத்து மருத்துவரை சந்திப்பதில்லை. பெண்கள், வெள்ளைப்படுதலை இயல்பு என நினைத்துக்கொள்கின்றனர். இதுபோன்ற எந்த அறிகுறிகளாக இருந்தாலும், மருத்துவரை அணுகி அதற்கான பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். தயங்கவே கூடாது. மார்பகம், மலக்குடல், தோல், வாய் என பெரும்பாலான புற்றுநோய்களை ஆரம்பநிலையில் வந்தால், 90 சதவீதம் பாதிப்புகளை குணமாக்கி விட முடியும். அரசு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இந்த அறிகுறிகள் இருக்கா?

''மாதவிடாய் முடிந்த பிறகும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் இருந்தாலோ, மார்பகங்களில் வலியின்றி சிறிய கட்டிகள் இருந்தாலோ, காம்புகளில் திரவம், ரத்தம் வடிந்தாலோ டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். ஆறாத புண், மலத்தில் ரத்தம் போதல், சிறுநீரகத்தில் ரத்தம் போதல், திடீர் மச்சம், மச்சம் பெரிதாகுதல், மச்சத்தில் ரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள், புற்றுநோய் பாதிப்பாக இருக்கலாம்,'' என்றார் டாக்டர் பிரபாகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி