கோவை;லங்கா கார்னர் சந்திப்புப் பகுதியில், ஏற்கனவே ஏராளமான போக்குவரத்துக் குளறுபடிகள் நிலவும் நிலையில், அங்குள்ள மழைநீர் வடிகால் மூடி கம்பிகளால், தினமும் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன.கோவை சந்திப்பு, அரசு மருத்துவமனைக்கு வரும் பல லட்சம் மக்களும், தினம் இந்த இடத்தைக் கடக்கின்றனர். பகலிரவாக போக்குவரத்து அதிகம் நிலவும், இந்த சந்திப்புப் பகுதியிலுள்ள ஒரு பகுதி ரோடு, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமுள்ளது; மற்றொரு பகுதி ரோடு, மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது.மழைநீர் இந்த சந்திப்பைக் கடந்து செல்லும் வகையில், வடிகாலை அமைத்துள்ள மாநகராட்சி, அதற்கு கனமான இரும்புக் கம்பிகளால் ஆன மூடியை, தளத்துடன் வைத்து, ரோட்டை இணைத்துள்ளது.ஆனால் அந்த கம்பியும், ரோடும் சமமாகவும், தரமாகவும் அமைக்கப்படாத காரணத்தால், ரோட்டில் வரும் வாகனங்களைத் தடுமாற வைக்கும் வகையில், இரும்புத் தளம் துருத்திக் கொண்டிருக்கிறது. இதைக் கவனிக்காமல் இயக்கப்படும் வாகனங்கள், விபத்துக்குள்ளாகின்றன. குறிப்பாக, தினமும் ஏராளமான டூ வீலர்கள் அங்கு தடுமாறி விழுகின்றன; கார்களின் டயர்கள் பழுதாகின்றன.சந்திப்புப் பகுதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் இருப்பதால், அவர்கள் தான் சரி செய்ய வேண்டுமென்று மாநகராட்சி அதிகாரிகள் முதலில் தட்டிக் கழித்தனர். மாநகராட்சி அமைத்ததால், அவர்கள் தான் பழுது பார்க்க வேண்டுமென்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இரு துறை அதிகாரிகளும் எதுவும் செய்யாமல் இருப்பதால், தினமும் விபத்துக்குள்ளாகி பலர் காயமடைகின்றனர்; வாகனங்கள் பழுதாகின்றன. இதுபற்றி மாவட்ட சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்திலும் புகார் எழுப்பப்பட்டும், எந்தத் தீர்வும் காணப்படவில்லை. மாநகராட்சி பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, 'அந்த இடத்தில் 'ரெடிமிக்ஸ்' போட்டு, சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் அந்த இடம் சீரமைக்கப்பட்டு, பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்றார்.செய்வதை திருந்தச் செய்திருக்கலாம்; இனியாவது சீரமைப்புப் பணியை விரைவாக, தெளிவாகச் செய்தால் நல்லது!சந்திப்புப் பகுதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் இருப்பதால், அவர்கள் தான் சரி செய்ய வேண்டுமென்று மாநகராட்சி அதிகாரிகள் முதலில் தட்டிக் கழித்தனர். மாநகராட்சி அமைத்ததால், அவர்கள் தான் பழுது பார்க்க வேண்டுமென்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.