கோவை;இன்டர்நெட் இணைப்புக்கு, இரண்டு முறை கட்டணம் வசூலித்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, விளாங்குறிச்சி, ஜீவா நகரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர், ஜியோ பைபர் இன்டர்நெட் இணைப்பு பெற விண்ணப்பித்தார். இதற்காக 2022, ஜூன் 2ல், 'போன்பே' வாயிலாக, 3,536 ரூபாய் கட்டணம் செலுத்திய போது, பரிவர்த்தனை 'பெயில்டு' என காட்டியதால், 'ஜிபே' வாயிலாக அதே தொகையை, மீண்டும் அனுப்பினார்.அப்போது, பணம் 'டெபிட்' ஆனது. வங்கி கணக்கை சரி பார்த்த போது, இரண்டு முறை அனுப்பிய பணமும் 'டெபிட்' ஆனது தெரிய வந்தது. அதிகமாக செலுத்தப்பட்ட தொகையை, திருப்பி அனுப்ப கோரி, ஜியோ நிறுவனத்தினரிடம் முறையிட்டார். 10 நாட்களில் தொகை திரும்ப வந்து விடும் என்று உறுதி அளித்தும், பணத்தை திருப்பி அனுப்பவில்லை. நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜெயலட்சுமி வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''எதிர்மனுதாரர் நிறுவனம், சேவை குறைபாடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டதால், மனுதாரருக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.