50 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை... 24 மணி நேரம்! பணியை 2025 ஆக.,க்குள் முடிக்க இலக்கு
கோவை : கோவை பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 50 ஆயிரத்து, 547 வீடுகளுக்கு, 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இத்திட்ட பணிகளை, 2025 ஆக., மாதத்துக்குள் முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கோவை பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம், 2018ல் துவக்கப்பட்டது. ஓராண்டு ஆய்வு பணி, நான்கு ஆண்டுகள் கட்டுமான பணி, இயக்கி, பராமரிப்பது, 21 ஆண்டுகள் என, தனியார் நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.ஒப்பந்தப்படி, 1,750 கி.மீ., துாரத்துக்கு பகிர்மான குழாய் பதிக்க வேண்டும்; 1,564 கி.மீ., துாரத்துக்கு பதிக்கப்பட்டிருக்கிறது. சத்தி ரோடு, அவிநாசி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டில் குழாய் பதிக்க வேண்டியிருக்கிறது; மேலும், எட்டு இடங்களில் ரயில்வே கிராஸிங் பகுதியில் வேலை செய்ய வேண்டியுள்ளது. மொத்தம், 33 மேல்நிலைத்தொட்டிகள் கட்ட வேண்டும்; 24 இடங்களில் கட்டப்பட்டு விட்டன; மீதமுள்ள ஒன்பது இடங்களில் கட்டுமான பணி நடந்து வருகிறது.மொத்தம், 1.50 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க வேண்டும். அதில், ஒரு லட்சத்து, 7,843 கட்டடங்களுக்கு மீட்டர் பொருத்தி, இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது; அதில், 50 ஆயிரத்து, 547 வீடுகளுக்கு, 24 மணி நேரமும் குடிநீர் சப்ளையாகிறது. 25 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது; இன்னும், 24 மணி நேரமும் சப்ளையாகும் திட்டத்தில் இணைக்கப்படவில்லை.ஒப்பந்தப்படி, 7 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டடங்களுக்கு தண்ணீர் வரும் வேகத்துக்கு சப்ளையாக வேண்டும். தற்போது, 10-15 மீட்டர் உயரமுள்ள கட்டடங்களுக்கும் எவ்வித உந்துசக்தி இல்லாமல் குடிநீர் சப்ளையாகி வருகிறது. அதாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடி வரையுள்ள கட்டடங்களுக்கும் கூட, 24 மணி நேர திட்டத்தில் குடிநீர் வினியோகமாகிறது. புகார் தெரிவிக்கலாம்!
இத்திட்டம் குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கொரோனா தொற்று பரவிய காலத்தில் பணிகள் செய்வதில் தொய்வு ஏற்பட்டதால், 2025 ஆக., மாதத்துக்குள் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.குடிநீர் வினியோகம் தொடர்பான புகார்களை, 98650 60708 என்ற 'வாட்ஸ்அப்' எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது, 0422 - 661 0000 என்ற எண்ணுக்கு காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை தெரிவிக்கலாம். சராசரியாக நாளொன்றுக்கு, 20-30 புகார்கள் வருகின்றன; உடனுக்குடன் தீர்வு காண்கிறோம். முன்பை போல், குடிநீர் சப்ளையாகும் பகுதிகளை நிறுத்துவதில்லை. எந்த இடத்தில் கசிவு ஏற்படுகிறதோ, அப்பகுதியில் உள்ள வால்வுகளை அடைத்து விட்டு, சீரமைக்கிறோம்; அதனால், மற்ற பகுதிகள் பாதிக்காது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தானியங்கி இயந்திரம்
குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி செலுத்துவதற்காக ஐந்து இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில், ரொக்கமாகவோ, காசோலையாகவோ அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாகவோ மாநகராட்சிக்கான தொகையை செலுத்தலாம்.