கோவை;குழாய் உடைப்பு, மின் பராமரிப்பு பிரச்னைகளால் குடிநீரின்றி அவதிப்பட்டு வந்த, சரவணம்பட்டி, கணபதி, காந்திபுரம், புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லுார், ஒண்டிப்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் மீண்டும் குடிநீர் வர வாய்ப்புள்ளதாக, மாநகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர். மின் பராமரிப்பு பணிக்காக, குந்தா அணையில் மின்னுற்பத்தி, 8ம் தேதி நிறுத்தப்பட்டது. அதனால், 8, 9ல் பில்லுார் அணையில் இருந்து குடிநீர் சப்ளை இருக்காது என அறிவிக்கப்பட்டது. மின் பராமரிப்பு பணி தாமதம் ஏற்பட்டதால், 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 13ம் தேதி குடிநீர் 'பம்ப்' செய்யப்பட்டது. சுத்திகரிப்பு நிலையத்தில் நான்கு மோட்டார்கள் உள்ளன. ஒவ்வொரு மோட்டாராக இயக்கப்பட்டு, குடிநீர் தருவிக்கப்பட்டது. நான்காவது மோட்டார் இயக்கியபோது, அதிக அழுத்தத்துடன் தண்ணீர் வந்ததால், 'ஏர் லாக்' ஆகி, 13ம் இரவு 10.30 மணியளவில் சரவணம்பட்டி பகுதியில் பில்லுார்-2வது திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து, மோட்டார் இயக்குவது நிறுத்தப்பட்டது. குழாய் உடைந்த பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறியதால், மண் இலகுத்தன்மையாகி, ரோட்டில் பிளவு ஏற்பட்டு, கீழிறங்கியது. மாநகராட்சி பொறியாளர்கள் முகாமிட்டு, கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தை வரவழைத்து தண்ணீரை வெளியேற்றினர். பொக்லைன் வாகனம் வரவழைத்து, ரோட்டை தோண்டி சிமென்ட் குழாய் அகற்றப்பட்டது. 1,000 எம்.எம். விட்டமுள்ள இரும்பு குழாய் 6 மீட்டர் நீளத்துக்கு பொருத்தப்பட்டது. இப்பணி நேற்று பிற்பகல் 3 மணிக்கு முடிந்தது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், '13ம் தேதி இரவு 11 முதல் நேற்று பிற்பகல் 3 மணி வரை, குழாய் மாற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். குழியில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றுவது, ரோட்டை தோண்டுவது, பழைய குழாயை வெட்டி அப்புறப்படுத்துவது, சிமென்ட் குழாய் இருபுறமும் புதிய இரும்பு குழாயை பொருத்துவது உள்ளிட்ட வேலைகளை, இரவு - பகலாக செய்தனர். நாளை (இன்று) முதல், குடிநீர் வினியோகம் சீராகும்' என்றனர்.
கேன் குடிநீர் வாங்கி சமாளிப்பு
மின் பராமரிப்பு, குழாய் உடைப்பு என ஒரே நேரத்தில் இரண்டு பிரச்னைகள் உருவானதால், சரவணம்பட்டி, கணபதி, காந்திபுரம், புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லுார், ஒண்டிப்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளையாகி எட்டு நாட்களாகி விட்டது. சேமித்து வைத்திருந்த குடிநீர் போதுமானதாக இல்லாததால், பொதுமக்கள் கேன் குடிநீர் வாங்கி சமாளித்தனர்.