உருக்குலைந்த ரோட்டில் வாகன ஓட்டுநர்கள் அவதி
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நெ.10. முத்துார் --- சிங்கையன்புதுார் செல்லும் ரோடு உருக்குலைந்து இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட நெ.10. முத்துார் இருந்து, சிங்கையன்புதுார் செல்லும் ரோட்டில், நாள்தோறும் ஏராளமான விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை எடுத்துச்செல்கின்றனர்.இந்த ரோட்டில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கனிம வளம் ஏற்றி செல்லும் டிப்பர் 'ஓவர் லோடு' ஏற்றிச்சென்று வருவதால், கிராமப்புற ரோடு ஆங்காங்கே சேதமடைய துவங்கியது. நாளடைவில் இந்த ரோடு முழுவதுமாக சேதம் அடைந்தது.மேலும், மழை காலங்களில் இந்த ரோட்டில் அதிகளவு சேறும் சகதியுமாக காணப்படுவதால், பைக்குகளில் பயணிக்க மிகவும் சிரமம் ஏற்படுகிறது. வெயில் காலங்களில் அதிகப்படியான மண் தூசு பறப்பதால், சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக டிப்பர் லாரிக்குப்பின் செல்லும் போது வாகன ஓட்டுநர்கள் திணறுவதுடன், விளை நிலங்களும் பாதிக்கப்படுகிறது.இதுகுறித்து, பல முறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை புகார் அளித்தும், டிப்பர் லாரிகளை கட்டுப்படுத்த முடிவதில்லை.ஐந்தாண்டு தாங்கக்கூடிய கிராமப்புற ரோடு, இரண்டு ஆண்டுகளில் சேதமடைந்து விடுகிறது. இதனால், பொதுமக்களே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.எனவே, இந்த வழித்தடத்தில் டிப்பர் லாரி ஓவர் லோடு ஏற்றிச்செல்வதை தவிர்க்க வேண்டும். ரோடு சீரமைப்பு பணியை துவங்க வேண்டுமென, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.