பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், மொபைல்போனில் பேசியவாறு தனியார் பஸ்சை இயக்கும் டிரைவர்களால் பிற வாகன ஓட்டுநர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். அரசு பஸ் டிரைவர்கள், பணியின் போது மொபைல்போன் பயன்படுத்தினால், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர், என, தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதை கண்காணிக்க, ஒவ்வொரு மண்டலத்திலும், ஏழு முதல், 12 பேர் வரையிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பஸ்களில், பணியின் போது ஊழியர்கள் மொபைல்போனை பயன்படுத்துவதில்லை. ஆனால், பொள்ளாாச்சியில் இருந்து, கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில், டிரைவர்கள் சிலர், அடிக்கடி மொபைல்போனில் பேசியவாறு பஸ்களை இயக்குகின்றனர். குறிப்பாக, ஆழியாறு, சோமந்துறைசித்துார் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில், இத்தகைய அத்துமீறல் தொடர்கிறது. இதுஒருபுறமிருக்க, பஸ் ஸ்டாப்புகளில், பின்னால் செல்லும் வாகனங்களுக்கு வழிவிடாமல் ரோட்டை மறித்தே பஸ்களை நிறுத்தி, பயணியரை ஏறி, இறங்கச் செய்கின்றனர். வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: தனியார் பஸ்களில் டிரைவர்கள் சிலர், மொபைல்போனில் பேசியவாறு வாகனத்தை இயக்குகின்றனர். சிலர், இயர்போன், புளுடூத், இயர்பட்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகின்றனர். இதை பயணியரும் அறிய முடியாத நிலை ஏற்படுகிறது. சுவாரஸ்யமாக பேசும்போது, ரோட்டில் செல்லும் மற்ற வாகனங்களை கவனிப்பதில்லை. பஸ் ஸ்டாப் பகுதிகளில் நடுரோட்டிலேயே பஸ்சை நிறுத்துகின்றனர். மற்ற வாகனங்கள் பற்றி கவலையின்றி, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல், இஷ்டம் போல் தாறுமாறாக ஓட்டுகின்றனர். போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அவ்வப்போது, ஆய்வு நடத்தி அத்துமீறும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.