பறந்து பார்த்து சேதி சொல்லும் ட்ரோன்! பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பு
மேட்டுப்பாளையம்: 'வனப்பகுதிகளின் பாதுகாப்புக்கு, ட்ரோன்களின் பங்கு வரும் நாட்களில் அதிகரிக்கும்' என எதிர்பார்க்கப்படுகிறது. மனித ---- வனவிலங்கு மோதல் தடுக்கப்படும் என, வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். கோவை வனக்கோட்டத்தை சேர்ந்த முன்களப் பணியாளர்களுக்கு, கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில், சமீபத்தில் ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட்டது. வன விலங்குகள் பாதுகாப்புக்கும், மனித -- வனவிலங்கு மோதலை தடுக்கவும், ட்ரோன்களை பயன்படுத்த, கோவை மாவட்ட வனத்துறை திட்டமிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தாலுகாவில், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை என மூன்று வனச்சரகங்கள் உள்ளன. தென்னை, வாழை பிரதான விவசாயமாக உள்ளது. வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுத்தாலும், இந்த வனச்சரகங்களில், யானைகள் உட்பட வன விலங்குகள் ஊருக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற பயிற்சிகள் வாயிலாக, வனச்சரகங்களில் ட்ரோன்கள் பயன்படுத்தும் போது, வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது தடுக்கப்பட வாய்ப்புள்ளது. வனத்துறையினர் கூறியதாவது: ஒரு நாள் நடத்தப்பட்ட ட்ரோன் கையாளும் பயிற்சியில், எவ்வாறு உபயோகிப்பது, அதன் செயல்பாடுகள், தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. வனப்பகுதி பாதுகாப்புக்கு ட்ரோன்கள் இன்றியமையாதது. இதை உபயோகப்படுத்தும் போது, வனவிலங்குகளின் நடமாட்டம் கண்டறியப்படும். தீ விபத்துக்கள் தடுக்கப்படும். வனத்துக்குள் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதா எனவும் கண்காணிக்கப்படும். மூன்றாவது கண் களம் காண்பது அவசியம். சமீபத்தில், சரவணம்பட்டி பகுதியில் யானைகள் கூட்டம் ஊருக்குள் உலா வந்தன. அவை பெரியநாயக்கன்பாளையம், காரமடை வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகள், அதன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள் என, மூன்று நாட்களுக்கு மேலாக முகாமிட்டன. ட்ரோன்கள் வாயிலாக யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, போகும் பாதைகள் 'அலர்ட்' செய்யப்பட்டு, மனித - வனவிலங்கு மோதல் முற்றிலும் தவிர்க்கப்பட்டது. அதே போல், யானைகளும் பத்திரமாக மீண்டும் வனத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. ட்ரோன்கள் களம் காணும் நேரம் வந்துவிட்டது. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் வனம் இன்னமும் பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு, வனத்துறையி னர் கூறினர்.