டி.டி.எச்.,சேவை குறைபாடு; இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை; டி.டி.எச்., நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, வடவள்ளி அருகேயுள்ள நவாவூர் பிரிவு பகுதியை சேர்ந்த குமார், அவரது வீட்டிலுள்ள டி.வி.,க்கு, பாரதி டெலிகாம் நிறுவனத்தின், ஏர்டெல் டி.டி.எச்., இணைப்பு பெற்றார். இரண்டு இணைப்பு பெற்றதால், ஒன்றை துண்டித்து கொள்ளும்படி ஆர்.எஸ்.புரத்திலுள்ள அதன் கிளை அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார். 24 மணி நேரத்திற்குள் இணைப்பு துண்டிக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இ--மெயில் அனுப்பியும் பதில் இல்லாததால், இரண்டு இணைப்புக்கும் சேர்த்து, 2,020 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரரிடம் வசூலித்த தொகை, 2,020 ரூபாயை திரும்ப கொடுப்பதுடன், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.