மஞ்சள் வளையத்துக்குள் கல்வி நிறுவனங்கள்
கோவை: கல்விநிறுவனங்களை சுற்றிலும் புகையிலை மற்றும் போதை சார்ந்த பொருட்கள் விற்பனை தடை செய்யும் வகையில், மஞ்சள் நிறக்கோடு பிரசாரம் துவக்கியுள்ளதாக, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் டாக்டர் சரண்யா தெரிவித்தார்.இதுகுறித்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் டாக்டர் சரண்யா கூறியதாவது:புகையிலை, போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக, தொடர்ந்து விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது.பள்ளி, கல்லுாரிகள் நான்கு புறத்திலும் 300 அடி தொலைவில் தடிமனாக மஞ்சள் நிறக்கோடு வரையப்படவுள்ளது. மஞ்சள் நிறக்கோடு உள்ள பகுதி, புகையிலை இல்லாத மண்டலமாக இருக்கும். அப்பகுதிகளுக்குள் புகையிலை, போதை பொருட்கள் சார்ந்த விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்.ஆறாம் வகுப்பு முதல் மாணவர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு 'விசிட்' செய்வது சார்ந்த திட்டத்தை, கலெக்டர் அனுமதி பெற்று, நடைமுறைப்படுத்தவுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.