முட்டை கோழிப்பண்ணை; மலைப்பாளையம் மக்கள் எதிர்ப்பு
சூலுார்; 'அதிகமான சுகாதாரசீர்கேடு ஏற்படும் என்பதால், முட்டை கோழிப்பண்ணை துவக்க அனுமதி வழங்க வேண்டாம்,'என, மலைப்பாளையம் மக்கள், அதிகாரியிடம் மனு அளித்தனர்.சுல்தான்பேட்டை ஒன்றியம், மலைப்பாளையம் கிராம மக்கள், சுல்தான்பேட்டை பி.டி.ஓ., அலுவலக மேலாளரிடம் அளித்த மனு விபரம் :மலைப்பாளையம் கிராமத்தில் முட்டை கோழிப்பண்ணை அமைக்கும் பணி நடக்கிறது. பண்ணை அமைந்தால், மலைப்பாளையம் கிராமம் மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள், சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படுவர். ஈக்கள் தொல்லை, துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பண்ணை அமையும் இடத்துக்கு அருகில் உள்ள பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரும் மாசடையும். அதனால், பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, முட்டை கோழிப்பண்ணைக்கு அனுமதி வழங்க வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.