உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை அரசு மருத்துவமனையில் முதியோர் அவதி ... ஆன்லைனில் பணம் செலுத்த சிரமம்

 கோவை அரசு மருத்துவமனையில் முதியோர் அவதி ... ஆன்லைனில் பணம் செலுத்த சிரமம்

கோவை, : கோவை அரசு மருத்துவ மனையில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., சென்டர்களில், ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துவதால், இந்த நவீன தொழில்நுட்பம் அறியாத ஏழை நோயாளிகள் பாதிக்கப் படுகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில், முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், ஆன்லைன் முறையில், பணம் செலுத்தும் நடைமுறை பின்பற்றப் படுகிறது. நோயாளிகளிடம் ரொக்கமாக பணம் பெற அலுவலர்கள் மறுப்பதால், பல்வேறு சிரமங்களை வயதான நோயாளிகள், உறவினர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நேற்று வயதான முதியோர் இருவர், ஆன்லைன் கட்டணம் செலுத்தும் முறை குறித்து அறியாமல் பணத்துடன், இரண்டு மணி நேரம் காத்திருந்தனர். பலர், முன்பின் அறியாத நபர்களிடம், உதவி கேட்டு பணத்தை கொடுத்து, ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தி சென்றனர். இதே போன்ற புகார் இதற்கு முன்பும் எழுந்தது. ஆன்லைனில் பணம் செலுத்த முடியாதவர்களிடம், ரொக்கமாக வசூலிக்க, ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், தற்போது வரை இப்பிரச்னை தீர்ந்தபாடில்லை. ஸ்கேன் கட்டணம் செலுத்த வந்த மூதாட்டி மல்லிகா கூறுகையில், ''ஜி.பே.,ல காசு போட சொல்றாங்க. அப்படின்னா என்னன்னு எனக்கு தெரியல கண்ணு.என்கிட்ட இந்த பட்டன் போன் தான் இருக்கு; இதையே முழுசா பயன்படுத்த தெரியாது. வர்றவங்க, போறவங்க கிட்ட ரெண்டு மணி நேரமா கேட்டுத்தான் பணம் கட்டுனேன். கடைசி வரை ரொக்கமா பணம் வாங்கவே இல்லை. உடம்புக்கு முடியாம வந்து, எத்தனைக்கு தான் அலையறது தெரியலை,'' என்றார். ரேடியாலஜி பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், 'தினந்தோறும் ஆன்லைன் வழியாக பெறப்பட்ட தொகை என, டார்கெட் நியமித்து பட்டியல் வெளியிடுகின்றனர். 80 சதவீதம் ஆன்லைன் வழியாகவும், முடியாதவர்கள் இருந்தால் பணம் பெறவும் கூறுகின்றனர். ஆனால், டார்கெட் நிர்ணயித்துள்ளதால், பணத்தை வாங்குவதில்லை' என்றார். ஏழை நோயாளிகளை பாடாய்படுத்தும் இந்த பிரச்னைக்கு, மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை