சுற்றுலா வாகனத்தை வழிமறித்து தாக்கிய யானையால் பரபரப்பு
வால்பாறை; வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில், வாகனங்களை வழிமறித்து தாக்கிய யானையால் சுற்றுலா பயணியர் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், இருமாநில சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சுற்றுலாபயணியர், குடும்பத்துடன் சாலக்குடி வழியாக அதிரப்பள்ளிக்கு சென்றனர். அப்போது, தும்பூர்முழி என்ற இடத்தில் எதிரே வந்த யானையை கண்டு வாகனத்தை நிறுத்தினர். அப்போது மின்னல் வேகத்தில் பின்னால் இருந்து வந்த, மற்றொரு யானை, வாகனத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டவுடன் யானை பின்நோக்கி நகர்ந்தது. இதில், காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆனால் அவர்கள் சென்ற வாகனம் சேதமானது. சிறிது நேரத்திற்கு பின் யானை வனப்பகுதிக்குள் சென்றதால், அவர்கள் மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கேரளா மாநிலம் சாலக்குடி ரோட்டில் பருவ மழைக்கு பின் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதிரப்பள்ளி - வால்பாறை ரோட்டில் செல்லும் சுற்றுலாபயணியர் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.