எஸ்டேட்களில் யானைகள் நடமாட்டம்; விறகு எடுக்க வனத்துக்குள் செல்ல தடை
வால்பாறை; வால்பாறை எஸ்டேட் பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், யாரும் விறகு எடுக்க செல்ல வேண்டாம், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை மலைப்பகுதி உள்ளது. கோடைமழைக்கு பின் வனவளம் செழுமையாக இருப்பதால், மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும், யானைகள் தனித்தனியாக பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.யானைகள் பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தை ஒட்டியுள்ள துண்டு சோலையிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுகின்றன.இதனால், பகல் நேரத்தில் தொழிலாளர்கள் நிம்மதியாக தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடமுடியாமல் தவிக்கின்றனர்.மாலை நேரத்தில் பணி முடிந்து தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கு முன்னதாக, யானை குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு அங்கு பயிரிடப்பட்ட வாழைகளை உட்கொள்கின்றன.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் போதிய அளவு இங்கு கிடைப்பதால், நிரந்தரமாக இங்கேயே முகாமிட்டுள்ளன. யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்கள் விறகு எடுக்க செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர். கண்டுகொள்வதில்லை!
வால்பாறையில், எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், யானைகள் விரும்பி உட்கொள்ளும், வாழை, பலா, கொய்யா போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. யானைகளுக்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் எளிதில் உணவு கிடைப்பதால் தான், இவை வனப்பகுதிக்குள் செல்லாமல் எஸ்டேட் பகுதியிலேயே முகாமிடுகிறது.யானைகளுக்கு பிடித்தமான தோட்ட பயிர்களை, குடியிருப்பு பகுதியில் பயிரிட வேண்டாம் என்று வனத்துறையினர் பல முறை நோட்டீஸ் கொடுத்தும், அதை எஸ்டேட் நிர்வாகங்கள் கண்டு கொள்ளாததால் தான், இப்பகுதிக்கு யானைகள் வருகை அதிகரித்துள்ளது என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.