முன்னாள் மாணவியர் சந்திப்பு... நினைவுகளை அசைபோட்டு தித்திப்பு!
கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவியர் சந்திப்பு, நேற்று நடந்தது.வார இறுதிநாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், கட்டடங்கள் மட்டுமே தங்களுக்குள் மொழிகளை பறிமாறிக் கொள்ளும். பள்ளி மரக்கிளைகளில் உள்ள பறவைகள் சத்தம் அங்கு நிறைந்திருக்கும். கதவு, ஜன்னல்களின் இடைவெளியே புகுந்து வெளிவரும் காற்றின் ரீங்காரம் கேட்டுக் கொண்டிருக்கும். ஆனால், வார இறுதிநாளான நேற்று, கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், உற்சாக குரல்களும், சிரிப்பொலியும் கலகலத்தன. என்னவென்று விசாரித்த போது, பள்ளியின் முன்னாள் மாணவியர் சந்திப்பு நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. பள்ளியில், 2007 - 08 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவியர் பலர், தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். பள்ளி நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். 'ஏய் இவ தான் உம்பொண்ணா, கியூட்டா இருக்கா' 'ஏய் ஸ்கூல்ல பார்த்த மாதிரி அப்படியே இருக்கடி' 'பாப்பா... இவங்க தாண்டா அம்மாவோட பிரண்ட்... போன்ல பேசுவாங்கள்ல...'
- இப்படி முன்னாள் மாணவியர், முகங்களில் மலர்ச்சியுடன் அளவளாவினர்.மாணவியரில் பலர் வக்கீல், வங்கி மேலாளர், ஐ.டி., ஊழியர், கல்லுாரி பேராசிரியர், இல்லத்தரசிகள் என மாறியிருந்தாலும், இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவியராகவே மாறி விட்டனர். மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தியதோடு, தங்கள் குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தனர். பள்ளித் தலைமையாசிரியர் கவிதா, விழாவுக்கு தலைமை வகித்தார். ஆசிரியர் இமாக்குலேட் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்தார். மாணவியர் சார்பில், பள்ளிக்கு முதற்கட்டமாக இரு பீரோக்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்வதாகவும் தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர்கள், ஜெஸ்ஸி, மேரி, ஜானகி, ஓய்வு பெற்ற ஆசிரியர் வசந்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.