கலப்பட உணவு கண்டறிய முகாம் நடத்த எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி; உணவுப்பொருட்களில் கலப்படத்தை கண்டறிந்து தவிர்கும் வழிமுறைகள் குறித்து, முகாம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உணவுப்பாதுகாப்பு துறையினர் முன்வர வேண்டும்.பொள்ளாச்சி நகரில், ஓட்டல்கள், பேக்கரிகள் என, உணவு சார்ந்த கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், சில கடைகளில் சுகாதாரமின்றி உணவு தயாரித்தல், கலப்பட உணவு விற்பனை, தரமற்ற மூலப்பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட புகார்கள் தொடர்கின்றன.வாடிக்கையாளர்கள், உணவுப் பொருட்களை வாங்கிச் சென்று பயன்படுத்தும் போதே, அதன் தரம் குறித்து அறிந்து வேதனை அடைகின்றனர். எனவே, பொதுமக்களே, உணவு வகைகளில் கலப்படம் செய்திருப்பதை கண்டறியும் வகையில் விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:கடந்த காலங்களில், அன்றாடம் பயன்படுத்தும் உணவு, தின்பண்டங்களின் தரத்தை அறிந்து கொள்வது; சில உணவு வகைகளில் கலப்படம் செய்து விற்கப்படுவதை எவ்வாறு கண்டுபிடிப்பது, என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், உணவு பாதுகாப்பு துறையால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை மீண்டும் தொடர வேண்டும்.சுற்றுலா தலங்கள் தேர்வு செய்து, அங்கு, முகாம் அமைத்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், தாங்களாகவே, அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் கலப்படத்தை கண்டறிந்தால், எளிதில் புகாரும் தெரிவிக்கலாம்.இவ்வாறு, கூறினர்.