கால்நடைகளுக்கு மரபு வழி மருத்துவம்; கடைபிடிக்க விவசாயிகளுக்கு அறிவுரை
-- நமது நிருபர்-''வெற்றிகரமான மரபு வழி மருத்துவத்தை கால்நடை வளர்ப்பாளர்கள் பின்பற்ற வேண்டும்'' என்று தஞ்சை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை முன்னாள் பேராசிரியர் புண்ணியமூர்த்தி பேசினார்.'வனத்துக்குள் திருப்பூர்', 'வெற்றி' அமைப்பு மற்றும் அவிநாசி கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில், ரசாயன மருந்துகள் இல்லாமல் மரபுவழி கால்நடை வளர்ப்பில் லாபம் பெறுதல் குறித்த கருத்தரங்கம், அவிநாசியில் நடந்தது.அதில், தஞ்சை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் பேராசிரியர் புண்ணியமூர்த்தி பேசியதாவது:கடந்த 2001ல் பாரம் பரிய சித்த மருத்துவ முறையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், நோய்களுக்கான மருத்துவம் கண்டறிதல் போன்றவை துவங்கியது. நமது பாரம்பரியம், சித்த மருத்துவம், நோய்களை கண்டறிதல் முறைகள் உலகெங்கிலும் பரவி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.வெற்றிகரமான மரபு வழி மருத்துவத்தை, கால்நடை வளர்ப்போர் பின்பற்ற வேண்டும்.கடந்த 2014ல் போர்ச்சுக்கல் நாட்டில், 40 நாடுகளில் இருந்து கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டதில், நானும் ஒருவன். மாநாட்டில், கால்நடைகளுக்கு சினை ஊசி போடுவதை தடுக்க வேண்டும்.ஹோமியோபதி சித்த மருத்துவம், சீன முறை அக்கு பஞ்சர் ஆகிய முறைகளில் கால்நடைகளுக்கு மருத்துவம் வழங்க வேண்டும் போன்றவை, மிக முக்கிய கருத்தாக வைக்கப்பட்டது.சமைத்த உணவு பொருட்களை கால்நடைகளுக்கு குறிப்பாக, மாடுகளுக்கு கொடுக்கக்கூடாது சீரகம், வெந்தயம், கசகசா ஆகியவை கன்று குட்டிகளுக்கு செரிமானம் தரும் மருத்துவ முறையாகும்.நோய் என்பது என்னவென்று அறிந்து, அதற்கான மருத்துவம் அளிக்க வேண்டும். மாடுகள் இல்லை என்றால் மண் வளம் இல்லை. சுற்றுச் சூழலுக்கு மாடுகள் மையப்புள்ளியாக உயிர் சூழலை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.கருத்தரங்கில், திரளான விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பங்கேற்றனர்.